அள்ளி அணைத்தஅன்னை
இன்று இல்லை.
அழுகுரல்கேட்டு ஆறுதல்சொன்ன
அன்னை இங்கில்லை!
கண்ணில் பிறந்துவழிந்த
கண்ணீரனைத்தும் இன்று
தீர்ந்துபோய்விட்டது!
இதயத்துடிப்பே இதமாகஇல்லை!
வீடு இருண்டிருக்கிறது,
விளக்கேற்ற ஆர்வமில்லை.
காற்று நின்றதை,
கனவு கலைந்ததை,
கனத்த மனசுஏற்கவில்லை!
நிலவைக் காணவில்லை
வானம் இருண்டுகிடக்கிறது,
நிழல்கிடைக்கவில்லை - மேகம்
வெளுத்துக்கிடக்கிறது!
சோலையும் காய்ந்துவிட்டது!
அழுவதற்கு இனிஅன்னை
மடியில்லை - நேரில்
தொழுவதற்கினி தாயுமில்லை.
எதிர்காலத்தை இருளேசூழ்ந்தது
போலொரு உணர்வு!
வேங்கை எனைஅடித்து
வதைப்பதைப் போன்றதொரு
பிரமை!
நெருப்பில் என்னுயிர்
வீழ்ந்தது போன்றதொரு
உணர்வு!
தாயை இழந்த என்போன்ற
விவரமறிந்த பேதைகளுக்கு
துயரப் பிணியிலிருந்துமீள
மாற்று மருந்துண்டோ?
கேள்வியைத் தான்நான்
கேட்கிறேன் - ஆனால்
அதற்கோர் பதிலைச்
சொல்லதான் பண்டிதரில்லை.
Create your
podcast in
minutes
It is Free